பொது

DAESH அமைப்பை பின்பற்றியதாக சந்தேகிக்கப்படும் எண்மர் கைது

24/06/2024 07:19 PM

புத்ராஜெயா, 24 ஜூன் (பெர்னாமா) -- ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில், 4 மாநிலங்களில் ஏகக் காலத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் Daesh புரட்சிகர கோட்பாடுகளை பின்பற்றுவதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் உட்பட எண்மரை அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் கைது செய்திருக்கின்றது.

கிளந்தான், ஜோகூர், பினாங்கு மற்றும் சிலாங்கூரில் 25 முதல் 70 வயதிற்கு உட்பட்ட இரண்டு பெண்களும் 6 ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அச்சுறுத்தல்கள் செய்யப்பட்டிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு தெரிவித்தார்.

சொஸ்மா எனப்படும் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இல்லத்தரசி, வேலையில்லாதவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார பின்புலத்தை கொண்ட பல்வேறு நிலையிலானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)