உலகம்

விக்கிலீக்ஸ் தோற்றுநர் விடுதலை; நீதிமன்றம் தீர்ப்பு

26/06/2024 08:36 PM

ஆஸ்திரேலியா, 26 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட தம்மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் தோற்றுநருமான ஜூலியன் அசாஞ்சே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அசாஞ்சே குற்றவாளி என்று தீர்ப்பளித்த அமெரிக்க நீதித்துறை, அவர் ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலைச் செய்வதாக தீர்ப்பளித்தது.

இதன்வழி, அசாஞ்சே நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதை அடுத்து, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.

இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே, கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு அதை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அதுவரை கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர்.

சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.

ஆனால், இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்படாமல் அவர் லண்டன் சிறையிலேயே அடைபட்டிருந்தார்.

இந்நிலையில், தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)