2,225 இந்திய தொழில்முனைவோருக்கு 3 கோடியே 25 லட்சத்து 50,000 ரிங்கிட் கடனுதவி

03/07/2024 09:16 PM

கோலாலம்பூர், 03 ஜூலை (பெர்னாமா) --  வணிகத் துறையில் அதிகமான இந்தியர்களை ஈடுபடச் செய்வதிலும், அவர்களின் வியாபாரத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துவதிலும் அதீத முனைப்புச் செலுத்தி வந்த தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், கடந்த ஐந்தே  மாதங்களில் 2,225 தொழில்முனைவோர்களுக்கு 3 கோடியே 25 லட்சத்து 50,000 ரிங்கிட் கடனுதவியை வழங்கியுள்ளார்.
 
தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை அமைச்சின் கண்காணிப்பில் உள்ள தெக்குன், அமானா இக்தியார் (ஏ.ஐ.எம்), பேங்க் ராக்யாட் ஆகிய நிதியகங்கள் வழி, இந்திய தொழில்முனைவோருக்குப் பிரத்தியேக வியாபாரக் கடனுதவிகளை ஒதுக்கீடு செய்வதில் டத்தோ ரமணன் வரலாற்றுப் புதுமை செய்துள்ளார்.
 
‘தெக்குன் ஸ்புமி’ நிதியகப் பிரிவின் கீழ், புதிதாய் ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’ எனும் இன்னொரு வியாபாரக் கடனுதவி களத்தை உருவாக்கி, அதன் கீழ் மூன்று கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அவர் அறிவித்திருந்தார்.
 
தொடர்ந்து, பெண் தொழில்முனைவோர்களுக்கான அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) நிதியகத்தின் கீழ், இந்தியப் பெண்களுக்காக “பெண்” (P.E.N.N) எனும் புதிய வியாபாரக் கடனுதவியை அறிமுகம் செய்து, கூடுதலாக ஐந்து கோடி  ரிங்கிட் நிதியையும் அவர் அறிவித்திருந்தார்.
 
அதோடு, பேங்க் ராக்யாட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய தொழில்முனைவோர்களுக்காக ‘பிரிஃப்-ஐ’ (BRIEFF-I) எனும் புதிய கடனுதவி திட்டத்தை அறிமுகம் செய்து, பிரத்தியேகமாக ஐந்து கோடி ரிங்கிட் நிதியையும் அவர் ஒதுக்கீடு செய்திருந்தார்.
 
இந்நிலையில், ஆண்டு தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பிரச்சாரங்கள் - விளக்கக்கூட்டங்கள் வழி, கடந்த 31 மே 2024 வரை, தெக்குன் ஸ்புமி நிதிகயகத்தின் வழி  822 இந்தியத் தொழில்முனைவோர்களுக்கு 17.355 மில்லியன் ரிங்கிட் பகிரப்பட்டுள்ளதாகவும், ‘தெக்குன் ஸ்புமி கோஸ் பிக்’  எனும் புதிய கடனுதவித் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.

நேற்று முன்தினம் கூடிய மக்களவை கூட்டத் தொடரில், இந்திய தொழில்முனைவோர்களுக்கான மொத்த ஒதுக்கீடு குறித்தும், ஸ்புமி - பெண் திட்டங்கள் வழி பலனடைந்தோர் விவரம் குறித்தும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் எழுப்பியிருந்த கேள்விக்கு டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.
 
-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)