பொது

சுற்றுலா பேருந்து விபத்து தொடர்பான முழு அறிக்கை நாளை வெளியிடப்படும்

30/06/2024 06:47 PM

கோலாலம்பூர், 30 ஜூன் (பெர்னாமா) -- இரு சீன சுற்றுலாப் பயணிகளைப் பலிகொண்ட சுற்றுலா பேருந்து விபத்து தொடர்பான முழு அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கை போக்குவரத்து அமைச்சுடனான சிறப்பு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

"குறைகள் இருந்தால் உடனடியாக சோதனை நடத்துங்கள், என்று நான் அமைச்சிடம் கூறினேன். நாங்கள் ஏற்கனவே அறிவுரைகளை கூறினோம்,அவர்கள் கேட்கவில்லை, முழு விசாரணைக்கு நாங்கள் கவனம் செலுத்துவோம். முழு விசாரணைக்குப் பிறகு அவர்களின் தவறு கண்டுபிடிக்கப்பட்டதும்  உரிமத்தை ரத்து செய்வோம்," என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை காலை, மலேசியாவுக்கான சீனத் தூதர் ஒயாங் யுஜிங்குடன் கோலாலம்பூர் மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் அதனைத் தெரிவித்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 பேர் சீரான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முறையாக பராமரிக்கப்படாத அந்த சுற்றுலா பேருந்தின் நிலை குறித்தும் தாம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து புகார்களை பெற்றதாக டத்தோ ஶ்ரீ தியோங் குறிப்பிட்டார். 

அதே சமயம், தங்கள் நிறுவனங்களின் கீழ் பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகளின் உயிர்களை இலகுவாகக் கருத வேண்டாம் என்று சுற்றுலா முகவர்களுக்கு அவர்  வலியுறுத்தினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஜாலான் கெந்திங் செம்பாவிலிருந்து கெந்திங் மலை நோக்கிச் செல்லும் சாலையில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரு சீன நாட்டுப் பிரஜைகள் பலியானதோடு 19 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)