பொது

STSS அரிய வகை நோய்க் குறித்து தகவல் பெறப்படும்

20/06/2024 05:43 PM

புத்ராஜெயா, 20 ஜூன் (பெர்னாமா) -- ஜப்பான் எதிர்நோக்கியிருக்கும், Streptococcal toxic shock syndrome, STSS எனப்படும் அரிய வகை நோய்த் தொடர்பான தகவல்களை மலேசியா, உலக சுகாதார நிறுவனம், WHO-விடமிருந்து பெறவிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.

நாட்டில், அந்நோய்த் தொடர்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய, சுகாதார அமைச்சு அத்தகவல்களைப் பெறவிருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி கூறினார்.

“நாங்கள் அதன் தொடர்பான எந்தவொரு தகவலோ அல்லது அண்மைய நிலவரத்தையோ இன்னும் பெறவில்லை. எங்களுக்கு WHO-இடமிருந்து தகவல்கள் தேவைப்படலாம். அது மிகவும் முக்கியம். எங்களுக்கு அதன் தொடர்பான அண்மைய நிலவரம் கிடைத்தால், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இதுவரை, சிபிஆர்சி எனப்படும் தேசிய அவசரக் காலத் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மையத்திற்கோ அல்லது நோய்க் கட்டுப்பாட்டு பிரிவிற்கோ வந்தடையவில்லை,“ என்றார் அவர்.

இவ்வாண்டில், ஜப்பானில் 1,000-கும் மேற்பட்ட STSS சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய்க் கழகத்தைக் கோடி காட்டி சின்ஹுவா செய்தி வெளியிட்டிருந்தது.

தொண்டை வலி, காய்ச்சல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி, குடல் பிரச்சனை, குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை இதற்கான தொடக்கக்கட்ட அறிகுறிகளாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502