பொது

டி.எல்.பி புதிய வழிகாட்டல் அனைத்து அரசாங்கப் பள்ளிகளுக்கும் ஏற்புடையது

20/06/2024 05:54 PM

நிபோங் திபால், 20 ஜூன் (பெர்னாமா) -- டிஎல்பி எனப்படும் இருமொழி பாடத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டல், நாட்டில் உள்ள அனைத்து அரசாங்கப் பள்ளிகளுக்கும் ஏற்புடையதாகும்.

எம்.பி.எம்.எம்.பி.ஐ எனும் மலாய் மொழியை மேம்படுத்தி, ஆங்கில மொழியை வலுப்படுத்தும் கொள்கையின்படி, அனைத்து அரசாங்கப் பள்ளிகளிலும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மலாய் மொழியில் கற்பிக்கும் வகுப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்துவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

டிஎல்பி வழிகாட்டலுக்கு சில பள்ளிகள் இணங்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

''இது உண்மையில்லை. நாங்கள் அதனைக் கட்டாயப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். எங்களிடம் வழிகாட்டல் உள்ளது. அதனை நாங்கள் பயன்படுத்துகிறோம். இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனைச் செயல்படுத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பள்ளிகளுக்கு நாங்கள் உதவுவோம்,'' என்றார் ஃபட்லினா.

இன்று, பினாங்கு, நிபோங் திபாலில் ஆசிரியர் பள்ளித் திட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மலாய், ஆங்கில மொழிகளில் மாணவர்களின் புலமையை மேம்படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் ஃபட்லினா மேலும் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)