பொது

WCR பட்டியலில் மலேசியா 34ஆவது இடத்திற்கு இறங்கியுள்ளது - ஐஎம்டி தகவல்

21/06/2024 07:15 PM

கோலாலம்பூர், 21 ஜூன் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு உலக போட்டித்திறன் தரவரிசை, WCR பட்டியலில் மலேசியா 34-வது இடத்திற்கு இறங்கியிருப்பதாக அனைத்துலக நிர்வகிப்பு மேம்பாட்டு கழகம், ஐ.எம்.டி வெளியிட்டுள்ளது.

2023-ஆம் ஆண்டில் ரிங்கிட் பலவீனம் அடைந்ததே அதற்கு காரணம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.

இருப்பினும், தற்போது ரிங்கிட்டின் செயல்திறன் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

''அதனால் ஓராண்டு குறைபாடு உள்ளது. மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று ரிங்கிட்டின் நிலைத்தன்மை. அதனால் பலவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிங்கிட் முதலீட்டின் மதிப்பீட்டை அதிகம் பாதிக்கிறது. உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் அனைத்தும் ரிங்கிட்டில் மதிப்பிடப்படுகின்றன. 2023-ஆம் ஆண்டில் ரிங்கிட் பாதிக்கப்பட்டது. அதனால் நமது போட்டித்தன்மையும் பாதிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் சி.எஸ்.ஐ எனப்படும் மையப்படுத்தப்பட்ட நிலைத்தன்மை புலனாய்வு தீர்வு தளத்தை தொடக்கி வைத்தப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தெங்கு சஃப்ருல் அவ்வாறு கூறினார்.

2023-ஆம் ஆண்டில் 27-வது இடத்திலிருந்து 2024-ஆம் ஆண்டில் 34-வது இடத்திற்கு நாடு வீழ்ச்சியடைந்ததற்கு முதன்மைக் காரணம், தேசிய போட்டித்திறனை அளவிடுவதற்கு 2023 தரவுகளை சார்ந்திருந்ததே ஆகும் என்று அமைச்சு மேற்கொண்ட தொடக்க ஆய்வில் தெரிய வந்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.

ஆகவே, உற்பத்தித் துறையில், குறிப்பாக 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மின்சாரம் மற்றும் மின்னணுத் துறையில் நாடு சிறந்த அடைவுநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகப் போட்டித்திறன் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவின் நிலைப்பாட்டில் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெங்கு சஃப்ருல் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)