பொது

முதல் காலாண்டில் 8,370 கோடி ரிங்கிட் முதலீட்டின் மூலம் சிறந்த அடைவுநிலை பதிவு

21/06/2024 06:25 PM

கோலாலம்பூர், 21 ஜூன் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8,370 கோடி ரிங்கிட் முதலீட்டின் மூலம் சிறந்த அடைவுநிலையை மலேசியா பதிவு செய்துள்ளது.

2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அத்தொகை 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்த ஊக்கமளிக்கும் அடைவுநிலை, குறிப்பாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை புலப்படுத்துவதாக MITI அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

அந்நிய முதலீட்டில் 23.8 விழுக்காடு அதிகரிப்பும் உள்நாட்டு முதலீட்டில் 1.6 விழுக்காடு உயர்வும் இந்தச் சிறந்த அடைவுநிலைக்கு ஆதரவளித்ததாக அவர் கூறினார்.

அதோடு, வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 14.6 விழுக்காடு உயர்வு கண்டதும் அதற்கு துணைப்புரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"அடைவுநிலையின் அடிப்படையில், இந்த செயல்திறன் தொடரும் என்று நம்புகிறேன். ஆனால், புவிசார் அரசியல் வர்த்தக சிக்கல்கள் சவாலாக இருக்கலாம். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த வர்த்தகப் போரை நாம் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும்," என்றார் தெங்கு சஃப்ருல்.

2024-ஆம் ஆண்டில் முதல் காலாண்டின் அடைவுநிலையில், ஆயிரத்து 257 திட்டங்கள் மூலம் மொத்தம் 29 ஆயிரத்து 27 புதிய வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட 8370 கோடி ரிங்கிட் முதலீட்டில், வெளிநாட்டு முதலீடு 56 விழுக்காடு அல்லது 4700 கோடி ரிங்கிட் ஆகும்.

இதனிடையே, எஞ்சியுள்ள 44 விழுக்காடு அல்லது 3670 கோடி ரிங்கிட் உள்நாட்டு முதலீடாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)