பொது

பணம், சாதி அடிப்படையில் வாக்கு கேட்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்

22/06/2024 08:19 PM

கோலாலம்பூர், 22 ஜூன் (பெர்னாமா) -- இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் மூத்த கட்சியான மஇகாவில் சாதி அடிப்படையிலும் பணம் கொடுத்து வாக்கு வேட்டையில் ஈடுபடும் போக்கையும் வேட்பாளர்கள் முற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஒரு வலுவான கட்சியாகத் திகழும் ம.இ.காவின் நற்பெயருக்கு இத்தகைய நடவடிக்கைகள் களங்கம் விளைவிக்கும் என்பதால் அவ்வாறு செய்பவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் எச்சரித்தார்.

''பிரச்சாரம் நடைபெறும் வரையில் வேட்பாளர்கள் யாரும் பணம் கொடுத்து வாக்குகளைத் திரட்ட வேண்டாம். அதேபோல சாதி அடிப்படையில் பேசி கவரும் விதமும் என் தலைமையில் இருப்பதை நான் விரும்பில்லை. அவ்வாறு செய்பவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கை எடுத்தால் என் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது,'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆட்சியிலோ அரசாங்கத்திலோ ம.இ.கா முக்கியப் பதவிகளில் அங்கத்துவம் வகிக்காவிடினும் இந்தியர்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

எனவே, தற்போதைய அரசியல் சூழலைப் புரிந்துக் கொண்டு விவேகமான முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வாக்களிப்பவர்களையும் உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

எனவே, தமது தலைமைத்துவத்திற்கு பின்னர் கட்சியை சீர்ப்படுத்தும் வேலைகள் அனைத்தும் நிறைவுப் பெற்றுள்ளதாகவும் இனி அதனை வலுப்படுத்தும் கடப்பாட்டை உறுப்பினர்களே கொண்டிருப்பதாகவும் விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இன்று, ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில குழுக்களுக்கான வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]