அரசியல்

ம.இ.கா துணைத் தலைவராக சரவணன் போட்டியின்றி தேர்வு

22/06/2024 08:19 PM

கோலாலம்பூர், 22 ஜூன் (பெர்னாமா) --  டத்தோ ஶ்ரீ எம்.சரவணனை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் நடப்பு துணைத் தலைவராகிய அவர், அதே பதவிக்கு மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது முறையாக ம.இ.கா துணைத் தலைவராக தம்மை தேர்ந்தெடுத்த கட்சி மற்றும் அதன் தலைமை நிர்வாகத்தின் எதிர்ப்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யவிருப்பதாக டத்தோ ஶ்ரீ சரவணன் உறுதியளித்தார்.

''கட்சியை சமூக அடிப்படையிலும் பொருளாதார நிலையிலும் மீட்சி பெற வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பேன். மேலும் இளைஞர் மகளிரை அரசியல் அடிப்படையில் வளர்ப்பதற்கும் தொடர்ந்து சில ஆக்கப்பூர்வ திட்டங்களை முன்வைத்துள்ளேன். அவற்றையெல்லாம் கட்டம் கட்டமாக நிறைவேற்றுவேன்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் மூன்று உதவித் தலைவர் பொறுப்புகளுக்கு இம்முறை டத்தோ டி.மோகன், டத்தோ முருகையா, டத்தோ அசோஜன், டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன் ஆகிய நால்வர் போட்டியிடவிருப்பதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதோடு அதன் மேம்பாட்டை வலுப்படுத்தவே நான்காவது தவணையாக தாம் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக வேட்பாளர்களில் ஒருவராகிய டத்தோ டி.மோகன் கூறினார்.

''போட்டியிடுவது எனக்குப் புதிதல்ல. இதற்கு முன்னர் நான் வெற்றி பெற்ற அனைத்து பதவிகளுக்கும் முறையாகப் போட்டியிட்டே வந்துள்ளேன். இந்த முறையும் போட்டி சவாலாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ள தயார்'' என்றார் அவர்.

இம்முறை போட்டியிடும் அனைவரும் சிறந்த அரசியல் மற்றும் சமூக ஆற்றலைக் கொண்டிருப்பதால் இத்தேர்தல் கடுமையானதாக இருக்கும் என்று மற்றொரு வேட்பாளரான  டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

அதேவேளையில், கட்சியின் 21 மத்திய செயலவை பொறுப்புகளுக்கு இம்முறை 45 பேர் போட்டியிடவிருக்கின்றனர்.

மேலும், கிளந்தான், சபா, கூட்டரசுப் பிரதேசம், திரெங்கானு, கெடா, ஜோகூர் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற ஏழு மாநிலங்களிலும்  மாநில பொறுப்பாளர்களுக்கான போட்டியும் நடைபெறும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]