பொது

கின்றாரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் கை வைக்காதீர்

29/06/2024 07:40 PM

பூச்சோங், 29 ஜூன் (பெர்னாமா) -- வரலாற்றில் பல கல்வியாளர்களை உருவாக்கி இருக்கும் 78 ஆண்டுகால கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரத்திற்கு இன்னும் முழுமையாகத் தீர்வு பிறக்கவில்லை.

அப்பகுதியில் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் பொருட்டு சாலை விரிவாக்கத்திற்காக பள்ளி அமைந்திருக்கும் நிலத்தை மேம்பாட்டு நிறுவனம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக கோரி வருகிறது.

அந்நிறுவனத்தின் எண்ணம் நிறைவேறினால் பள்ளி போதிய இடவசதியின்றி பெரும் இடர்பாடுகளை சந்திக்கும் என்பதால் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் நிலத்தில் யாரும் கை வைக்காமல் இருக்க அனைவருக்கும் ஒருமித்த குரலாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று, அப்பள்ளியைப் பாதுகாக்கும் நடவடிக்கைக் குழு தலைவரான டாக்டர் ஶ்ரீ ராம் சின்னசாமி கேட்டுக் கொண்டார்.

''இந்திய சமுதாயத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ்ப்பள்ளிகளைக் காக்கும் கடமையை அனைவரும் கொண்டிருக்க வேண்டும். அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் கோரினால், அதனால் அப்பள்ளியின் பல பகுதிகள் பறிபோகும் நிலை ஏற்படலாம். எனவே, அப்பள்ளியைக் காக்க ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் எங்களுக்குத் தோள் கொடுக்க வேண்டும்,'' என்று அவர் தெரிவித்தார்.

பூச்சோங் வட்டாரத்தின் பிரதானத் தமிழ்ப்பள்ளியாக விளங்கும் இப்பள்ளியில் சுமார் 700 மாணவர்கள் பயில்கின்றனர்.

இந்நிலையில் மேம்பாட்டு நிர்வாகத்தின் தேவைக்காக, பள்ளியில் தற்போதுள்ள அடிப்படை வசதிகள் அப்புறப்படுத்தப்பட்டாலோ அல்லது வேறு இடத்திடற்கு மாற்றம் கண்டாலோ அது பெற்றோர் மத்தியில் நம்பிக்கை இல்லா தன்மையை ஏற்படுத்திவிடும்.

இதனால் வரும் ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையில் பெருமளவில் சரிவு காணும் அபாயம் ஏற்படலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

அதுமட்டுமின்றி, குறுகலான இப்பகுதியில் புதிய கட்டடங்கள் எழுப்படுவதால் அது மாணவர்களுக்கும் அவர்களை ஏற்றிச் செல்லும் பெற்றோரும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து சுபாங் ஜெயா மாநகர் மன்றம், MBSJ மற்றும் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், DBKL ஆகிய முத்தரப்பிடமும் தாம் உரிய ஆவணங்கள் மற்றும் கடிதங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் டாக்டர் ஶ்ரீ ராம் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதற்கான மாற்றுவழியை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் கலந்தாலோசித்தால் அதற்கு தமது தரப்பு முழு ஒத்துழைப்பு நல்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)