பொது

காசா போரை முடிவுக்கு வர மலேசியா எப்போதும் ஆதரவளிக்கும்

24/06/2024 07:24 PM

கோலாலம்பூர், 24 ஜூன் (பெர்னாமா) -- இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்வு உட்பட பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அநீதியும் வன்முறையும் முடிவுக்கு வருவதை உறுதி செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் மலேசியா எப்போதும் ஆதரவளிக்கும்.

ஆனால், தொடர்ச்சியாக அந்நாட்டு மக்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் வலியுறுத்தினார்.

அதன் தொடர்பில், காசாவில் போர்நிறுத்த திட்டத்தை ஆதரிப்பதற்காக ஜூன் 10-ஆம் தேதி அமெரிக்கா முன்மொழிந்த பரிந்துரைக்கு மலேசியாவும் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''அண்மையில், ஜூன் மாதத்தில், போர்நிறுத்த பரிந்துரை ஒன்று முன்மொழியப்பட்டது. மூன்று கட்ட போர்நிறுத்தம். அமெரிக்கா முன்மொழிந்த பரிந்துரை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் 14 வாக்குகள் ஆதரவில் ஒப்புதல் பெற்றுள்ளது. ஒரு நாடு மட்டுமே அதில் பங்கேற்கவில்லை. அம்முடிவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனென்றால் பொதுவாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையிலோ அல்லது மற்ற பாதுகாப்பு மன்றத்திலோ, ஒரு பரிந்துரையை முன்வைத்தால், மற்றவர்கள் ஆதரிக்க மாட்டார்கள்,'' என்றார் அவர்.

இன்று, மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது, மாராங் நாடாளுமன்ற உறுப்பினர், டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் எழுப்பிய கேள்விக்கு முஹமட் ஹசான் அவ்வாறு பதிலளித்தார்.

காசாவில் மூன்று கட்டங்களாக போர்நிறுத்தம் செய்வதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பரிந்துரைக்கு, ஜூன் 10-ஆம் தேதி ஐநா பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)