பொது

இணைய வங்கி சேவையில் ஏற்படும் தடங்கல்கள்; சில வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

26/06/2024 07:50 PM

கோலாலம்பூர், 26 ஜூன் (பெர்னாமா) --  இணைய வங்கி சேவையில் ஏற்படும் தடங்கல்களைக் களைவதற்கு பேங்க் நெகாரா மலேசியா, BNM சில வங்கிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சேவையில் ஏற்பட்ட தடங்கல்களுக்கான முக்கிய காரணத்தை உடனடியாக கண்டறிய சம்பந்தப்பட்ட வங்கி கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டதோடு, அதே போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

''2013-ஆம் ஆண்டு நிதி சேவை சட்டம் மற்றும் 2013-ஆம் ஆண்டு இஸ்லாமிய நிதி சேவை சட்டம் ஆகியவற்றின் கீழ், நிதி கழகங்கள் மீதான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, BNM அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. செயலிழப்பை எதிர்கொள்ளும் முக்கியமான அமைப்புகள் திட்டமிடப்படாத நேர அனுமதியுடன் திட்டமிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தத் தவறியது போன்ற  நடவடிக்கைகள், தொடர்புடைய கொள்கை ஆவணத்தின் எந்த விதிமுறைக்கும் இணங்கவில்லை என்று கண்டறியப்பட்டால்,'' என்றார் அவர்.

இன்று மக்களவையில் ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் எழுப்பிய கேள்விக்கு லிம் ஹுய் யிங் அவ்வாறு பதிலளித்தார்.

விதி மீறல்களுக்கு அபராதம் விதிப்பது உட்பட தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகுந்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் வங்கி சேவையில் ஏற்பட்ட தடங்களினால், பயனீட்டாளர்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கினர்.. 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]