பொது

தேசிய எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுத் திட்டம்; உள்துறை அமைச்சால் உருவாக்கம்

27/06/2024 06:22 PM

கோலாலம்பூர், 27 ஜூன் (பெர்னாமா) -- நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் முயற்சியாக உள்துறை அமைச்சு தேசிய எல்லைப் பாதுகாப்புக்கான முதன்மைத் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

நாடாளுமன்றத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், தேசிய எல்லைக் கட்டுப்பாட்டில் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களை உட்படுத்திய ஒருங்கிணைந்த வியூக மற்றும் செயல் திட்டத்தை உருவாக்குவதன் மூலமாக இத்திட்டத்திற்கான கட்டமைப்பை உள்துறை அமைச்சு உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் அதன் திறனை மேம்படுத்துதல் ஆகிய வியூக அடிப்படையிலான வரையப்பட்ட இரண்டு திட்டங்கள் விரைவில் செயலாக்கம் காணும் என்றும் உள்துறையமைச்சு கூறியுள்ளது. 

தேசிய எல்லைப் பகுதியின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட வியூகம், நாட்டின் ஐந்து முதன்மை எல்லைகளான கெடா, பெர்லிஸ் மற்றும் பேராக் மாநிலங்களை உட்படுத்திய வட பகுதி, கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களை உட்படுத்தி கிழக்குப் பகுதி, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களை உட்படுத்தி தென் பகுதி ஆகியவற்றுடன் சபா, சரவாக் ஆகிய,மாநிலங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தும். 

இந்தோனேசியா - சரவாக் எல்லைப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் கடத்தலை எதிர்த்துப் போராடும் அதிகாரிகளுக்கு இடையே அதிகார வரம்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து மாஸ் காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் மொர்டி பிமோல் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வ பதிலளிக்கப்பட்டது. 

இதனிடையே, எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டில் செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை மேம்படுத்தும் முயற்சியாக தேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பான NBCS, அதற்கான மேம்பாட்டு ஆய்வை செயல்படுத்தி வருவதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]