பொது

மலேசியா- சிங்கப்பூர் பாலத்தின் நூற்றாண்டு விழா

28/06/2024 07:45 PM

ஜோகூர் பாரு, 28 ஜூன் (பெர்னாமா) -- மலேசியா - சிங்கப்பூர் இடையிலான எல்லைப் பகுதிகளை இணைக்கும் பாலத்தின் நூற்றாண்டு விழாவை நிறைவு செய்து வைக்க, ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அங்கு சிறப்பு வருகை புரிந்திருந்தார்.

இவ்விழாவின் அடையாளமாக மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸியும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் 100 புறாக்களைப் பறக்கவிட்டதையும் சுல்தான் பார்வையிட்டார்.

இவ்விழாவில், ஜோகூர் மாநில அரசாங்கம் மற்றும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் தலைமையை உட்படுத்திய இரு பிரதிநிதிகளும் இரு நாடுகளுக்கு இடையில் நீடித்து வரும் நூற்றாண்டு உறவைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளையும் பரிமாறிக் கொண்டனர்.

"இவ்விழாவானது, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜோகூர் ஆகியவற்றுக்கிடையே சகோதரத்துவத்தையும், அண்டை நாடுகளின் உணர்வையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது," என்று டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார். 

ஜோகூர் மாநில அரசவை மன்ற ஆளுநர் டத்தோ டாக்டர் ரஹிம் ரம்லி, அம்மாநில செயலாளர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் அஸ்மி ரொஹனி ஆகியோருடன், ஜோகூர் மாநில பொருளாதார, சுற்றுலா மற்றும் கலாச்சார அலுவலகம் JETCO-வின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஸ்னி முஹமட்டும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார். 

இரு நாடுகளும் பங்கேற்ற இந்த வரலாற்று விழா, காலை மணி 9.05-க்கு நிறைவடைந்தது.

1,056 மீட்டர் நீளம் கொண்ட ஜோகூர் பாலம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான தரைவழி இணைப் பாதையாகும்.

1924-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பாலத்தைத் தொடந்து, மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாதையான LINKEDUA  மற்றும் இஸ்கண்டார் புத்ரி ஆகியவை 1998-ஆம் ஆண்டு திறக்கப்பட்டன.   

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]