பொது

கர்ப்பால் சிங்கை பின்பற்றி மக்களின் உரிமைக்காக ஒருமைப்பாட்டு அரசாங்கம் போராடும் 

29/06/2024 05:48 PM

ஜார்ஜ்டவுன், 29 ஜூன் (பெர்னாமா) --  மறைந்த மூத்த அரசியல் தலைவர் டத்தோ ஶ்ரீ கர்ப்பால் சிங்கின் தூரநோக்கு சிந்தனைக்கு மதிப்பளித்து, ஒவ்வொரு மலேசியரின் உரிமைக்காக ஒருமைப்பாட்டு அரசாங்கம் தொடர்ந்து போராடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

இன்று, பினாங்கு டோப் கொம்தார் கட்டடத்தில் நடைபெற்ற கர்ப்பால் சிங்கின் நினைவலை கூட்டத்தில் பேசிய அன்வார், இன, மதத்திற்கு அப்பாற்பட்டு ஊழலுக்கு எதிராக போராடும் கர்பாலின் கொள்கையைத் தொடர்வதற்கான தமது உறுதிப்பாட்டை  மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இக்கூட்டத்தில் ஜசெக தேசிய துணைத் தலைவரும் கர்பாலின் இரண்டாவது மகனுமாகிய கோபிந்த் சிங் டியோ, பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் மற்றும் கர்பாலின் மூன்றாவது மகனும் முன்னாள் துணை அமைச்சருமான ராம்கர்பால் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, துணிச்சல் மிக்கவரான கர்ப்பால் சிங், ஜனநாயக கொள்கைகளை பின்பற்றும் சிறந்த மனிதர் என்று வர்ணித்த அன்வார், பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் 'ஜெலுத்தோங் புலி' என்று இறுதிவரை பலராலும் பாராட்டப்பட்டவர் என்று புகழாரம் சூட்டினார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)