பொது

'ஜெண்டேலா திட்டம்': குத்தைகையாளர் மீது தொடர்பு அமைச்சு அதிருப்தி

30/06/2024 07:15 PM

கூலாய், 30 ஜூன் (பெர்னாமா) -- சபா, சரவாக் உட்புற பகுதிகளில் தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம், ஜெண்டேலாவின் முதற்கட்ட திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதில் தோல்விக் கண்டிருக்கும் குத்தகையாளர்கள் மீது தொடர்பு அமைச்சு தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

2022-ஆம் ஆண்டிலேயே நிறைவுப் பெற்றிருக்க வேண்டிய திட்டத்தின் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் அமைச்சு அவ்வப்போது அவ்விரு மாநிலங்களுக்கும் வருகையளித்து வரும் நிலையில், அத்திட்டம் இன்னும் நீட்டிக்கப்பட்ட காலக்கட்டத்திலேயே உள்ளதாக, தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் குறைப்பட்டுக் கொண்டார்.

"நாங்கள் அவர்களுக்கு அபராதம் விதிப்போம். கால தாமதக் கட்டணம் அல்லது ரொக்கமாக்கப்பட்ட சேதம் எனும் அடிப்படையில் அபராதம் விதிப்போம். அல்லது சம்பந்தப்பட்ட குத்தகையாளரை மறுபரிசீலனை செய்வோம்," என்றார் அவர்.

இன்று, ஜோகூர், கூலாய் மாவட்ட கல்வி அலுவலகத்தில், 2023-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

முதற்கட்ட ஜெண்டேலா திட்டம் நிறைவடைந்தப் பின்னரே அத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கும் என்று தியோ தெரிவித்தார்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)