பொது

கிளந்தானில் செயற்கை மழைப் பொழிவை மேற்கொள்ள அரசாங்கம் இணக்கம்

19/06/2024 07:52 PM

கோலாலம்பூர், 19 ஜூன் (பெர்னாமா) -- கிளந்தான் ஆற்றின் நீர்மட்டக் குறைவு, வெப்பமான வானிலை மற்றும் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தை சமாளிக்க, ஜூன் 21 முதல் 23-ஆம் தேதி வரையில், செயற்கை மழைப் பொழிவு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கெமுபு விவசாய மேம்பாட்டு வாரியம், கடா விண்ணப்பித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படவிருப்பதாக துணைப் பிரதமர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா, விவசாயம், உணவு உத்தரவாத அமைச்சு, மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா மற்றும் அரச மலேசிய ஆகாயப் படை, TUDM ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

செயற்கை மழைப் பொழிவு நடவடிக்கைக்கு, 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக JPBP எனப்படும் மத்திய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுத் தலைவருமான டாக்டர் அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.

மூன்று நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினால், பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்ய கிளந்தான் ஆற்றின் நீர்மட்டத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் நம்புகின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)