அரசியல்

சுங்கை பக்காப் இடைத் தேர்தலில் நேரடி போட்டி நிலவுகிறது

22/06/2024 06:37 PM

நிபோங் திபால், 22 ஜூன் (பெர்னாமா) -- N20 சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத் தேர்தலில் நேரடி போட்டி நிலவுகிறது.

நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜோஹாரி அரிஃப்பினும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபிடின் இஸ்மாயிலும், இத்தேர்தலில் நேருக்கு நேர் மோதவிருப்பதாக அத்தேர்தல் நிர்வகிப்பு அதிகாரி கைரூல் நிசாம் கைருல்நிஸாம் ஹாஷிம் இன்று அறிவித்தார்.

வேட்புமனு பாரங்களை நான் சரிபார்த்தேன். எனக்கு திருப்தியாக உள்ளது. எந்தவொரு வேட்பு மனுவையும் நான் நிராகரிக்கவில்லை என்றார் அவர்.

காலை மணி 10 அளவில், பினாங்கு, நிபோங் திபால்,  தாமான் டேசா ஜாவியில் உள்ள, ஜாவி பல்நோக்கு மண்டபத்தில் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர், கைருல்நிஸாம் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.

தமது ஆதரவாளர்களுடன், ஜோஹாரி காலை மணி 9.03-க்கு வேட்புமனுவை சமர்ப்பித்த வேளையில், அமிடின் இஸ்மாயில்  காலை 9.06-க்கு தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

கெஅடிலான் கட்சியின் கோட்டையான சுங்கைப் பக்காப்பை மீட்டெடுக்கும் முயற்சியில்,
அமினுடின் பாக்கி கல்விக் கழகத்தின் வட பிரிவு முன்னாள் இயக்குநரான ஜோஹாரியை நம்பிக்கைக் கூட்டணி களமிறக்கி உள்ளது.

அதேபோல, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தனது வெற்றியைப் தற்காத்துக் கொண்ட பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சியின் நிபோங் திபால் துணைத் தலைவர் அபிடின் போட்டியிடுகின்றார்.

இன்று தொடங்கி, ஜூலை ஐந்தாம் தேதி இரவு மணி 11.59 வரையில் 14 நாட்களுக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும்.

முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும்.

ஜூலை ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் வாக்களிப்பு தினத்தில், 39 ஆயிரத்து 222 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)