அரசியல்

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு

22/06/2024 06:25 PM

நிபோங் திபால், 22 ஜூன் (பெர்னாமா) -- சுங்லை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க இரண்டு தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழுக்களை தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர்அமைத்துள்ளது.

தீங்கு, அதிருப்தி, பகை, இனவெறி மற்றும் மத உணர்வுகளைத் தூண்டாத அனைத்து விதமான பிரச்சாரங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக எஸ்.பி.ஆர் துணை தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் தெரிவித்தார்.

சட்டம் 5 அல்லது 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறாததும் அதில் அடங்கும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் அஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளரின் புகைப்படம், சின்னம், கட்சியின் சின்னம், கூட்டணி அல்லது உறுப்பு கட்சி தலைவரின் புகைப்படம் போன்றவற்றைக் கொண்ட தேர்தல் பிரச்சாரம் தொடர்பான விவரங்கள் கொண்ட கையேடுகள் அல்லது சுவரொட்டிகளை வெளியிடும் நோக்கத்திலான 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தை, தேர்தல் பிரச்சார அம்சங்களுக்கான வைப்பு தொகை செலுத்திய வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி, பிரச்சாரம் அமைதியாக நடைபெறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார அம்சங்களில், போட்டியிடும் வேட்பாளரின் கட்சி புகைப்படங்கள், உறுப்பு அல்லது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புகைப்படங்கள் போன்றவற்றிற்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஜூலை 5-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)