பொது

சுமார் 600 ஆபாச, விபச்சார தளங்களைத் தடை செய்தது எம்சிஎம்சி

24/06/2024 08:03 PM

கோலாலம்பூர், 24 ஜூன் (பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி ஜூன் முதலாம் தேதி வரையில், மொத்தம் 549 ஆபாச தளங்களையும் 69 விபச்சார தளங்களையும் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி தடை செய்துள்ளது.

சமூக ஊடக தள நடத்துநர்களுடன் இணைந்து, X மற்றும் Telegram செயலிகள் உட்பட பல்வேறு சமூக ஊடக தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 308 ஆபாச உள்ளடக்கங்களையும் விபச்சாரம் தொடர்பான 838 உள்ளடக்கங்களையும் எம்சிஎம்சி அகற்றியுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

"அமலாக்க நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, ஆபாசமான உள்ளடக்கம் சம்பந்தப்பட்ட மொத்தம் ஏழு வழக்குகள் குறித்து எம்சிஎம்சி விசாரணை செய்து வருகிறது. அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வரும் கண்காணிப்பு மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்நடவடிக்கையை எம்சிஎம்சி அவ்வப்போது தொடரும்,'' என்றார் தியோ.

பியூபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சித்தி அமினா அசிங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் தியோ அவ்வாறு கூறினார்.

சமூக ஊடக தளங்களில் காணப்படும் இது போன்ற உள்ளடக்கங்களை கண்காணித்து அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை சமூக ஊடக தள நடத்துநர்களுடன்  எம்சிஎம்சி தீவிரமாக ஈடுபடும் என்று அவர் கூறினார்.

மேலும், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து சமூக ஊடக தள நடத்துநர்களுடன் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்l ஜூலை மாதம் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)