பொது

பேராக் அறிவியல் விழாவில் செலாமா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது

25/06/2024 08:29 PM

ஈப்போ, 25 ஜூன் (பெர்னாமா) -- தமிழ்ப்பள்ளிகளில் இளம் அறிவியல் சாதனையாளர்களை உருவாக்குவதில் அறிவியல் விழாக்கள் பெரும் பங்காற்றுகின்றன.

இதுபோன்ற போட்டிகள் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும் பேச்சுத் திறனையும் மேம்படுத்துவதாக, பேராக் மாநில அளவில், நடைபெற்ற இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் வாகை சூடிய செலாமா தமிழ்ப்பள்ளி தலைமையாசியர் பி கலைவாணி கூறினார். 

ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களினால் பல முயற்சிகளை கையாண்டு மாணவர்கள் இப்போட்டியில் வெற்றிப் பெற்றிருப்பதாக கூறிய தலைமையாசிரியர் கலைவாணி  தொடர்ந்து பள்ளியில், அறிவியல் சார்ந்த நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்றார். 

அதோடு, வரும் காலங்களில், இதர தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்த நிலையை அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

''இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசிரியர் திரு லோகநாதனுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் மேலும் முன்னேற்றம் அடையயவும் வேண்டும். அதுபோல இதர தமிழ்ப்பள்ளிகளும்தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இந்த நிலையை அடைய வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த வெற்றியால் எங்கள் பள்ளி பெரிதும் பெருமை அடைகிறது'' என்று அவர் கூறினார்.  

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே, அறிவியல் மற்றும் கற்றல் செயல் திறனாற்றலை மேம்படுத்தும் வகையில், ASTI எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கம், அறிவியல் விழாவை ஆண்டு தோறும் நடத்துகின்றது. 

அதில், பேராக் மாநில அளவிலான அறிவியல் விழா,கடந்த சனிக்கிழமை, ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடத்தப்பட்டதில், அதிக மதிப்பெண்களுடன் செலாமா தமிழ்ப்பள்ளி முதலிடம் வென்றது.

அறிவியல் செயல்பாங்கு திறனில் தங்கள் மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைக் கொண்டதால், இந்த வெற்றி சாதகமானதாகவும், அத்திறனை மேம்படுத்துவதற்கு தங்களின் செலாமா தமிழ்ப்பள்ளி பல முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறுகின்றார் அப்பள்ளியின் மாணவர் நலப் பொறுப்பாசிரியர் லோகநாதன் பெருமாள்.

''எங்கள் பள்ளியில் அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளை நாங்கள் அதிகம் மேற்கொள்கிறோம். அது தொடர்பான போட்டிகளில் அவர்களை ஊக்குவிக்கின்றோம். புத்தாக்க திறனில் சாதனைச் செய்வோருக்கு நாங்கள் மாணவர் சபை கூடலில் பரிசுகளைக் கொடுத்து பாராட்டுவோம்.'' என்றார் அவர்.  

மொத்தம் 79 தமிழ்ப் பள்ளிகளைப் பிரதிநித்து 400 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்ற வேளையில், செலாமா பள்ளியோடு, ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளி, செயிண்ட் ஃபிளோமினா காண்வென்ட், கதோயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, தைப்பிங்கின் செயிண்ட் திரேசா, கமுண்டிங், தெலுக் இந்தானின் சிதம்பரம் பிள்ளை, கோலா கங்சாரின் லாடாங் கட்டி, சுங்கை சிப்புட்டின் காந்தி மெமோரியல் மற்றும் செமொரின் கிளேபாங் ஆகிய 10 தமிழ்ப்பள்ளிகள் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் விழாவில் கலந்து கொள்வார்கள். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)