பொது

34-வது தொகுதி ஜெண்டேலா திட்டத்தின் அனைத்து 19 தொலைத்தொடர்பு கோபுரங்கள் செப்டம்பர் இறுதியில் செயல்படும்

26/06/2024 07:53 PM

கேமரன் மலை, 26 ஜூன் (பெர்னாமா) -- பகாங்கில் உள்ள 34-வது தொகுதி தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம், ஜெண்டேலா-வின் முதலாம் கட்டத்தின் கீழ் ஆக இறுதியாக கட்டி முடிக்கப்பட்டது உட்பட அனைத்து 19 தொலைத்தொடர்பு கோபுரங்களும் வரும் செப்டம்பர் இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரன் மலைப் பகுதியை மையமாகக் கொண்ட கட்டுமானத்தில் பல சவால்களை சந்திக்க நேரிடும் என்றாலும், தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி மற்றும் பகாங் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் ஆதரவினால் அனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடையும் என்றும் நம்பப்படுகிறது.

ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்தின் கட்டுமான செயல்முறை, கட்டமைப்பு மற்றும் தளம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அம்சங்களில் விரிவான கவனம் செலுத்துவதன் மூலம் 34-வது தொகுதிக்கான கட்டுமானத்தை நிறைவு செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக Edotco குழும நிறுவனத்தின் ஒழுங்குமுறைத் தலைவர் ஃபிர்டாவுஸ் ஃபட்சில் தெரிவித்தார்.

அண்மையில், பகாங் கேமரன் மலையில், Edotco மற்றும் CelcomDigi-க்கு இடையிலான 34-வது தொகுதி ஜெண்டேலா முதலாம் கட்டத் திட்டத்தின் இறுதியாக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பெர்னாமாவிடம் அவர் அவ்வாறு கூறினார்.

கட்டப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் நீண்ட காலத்திற்குப் பயன்படுத்த பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய, கட்டுமானத் தளத்தை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, நிலப்பரப்பின் வடிவமைப்பு பலமுறை மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஃபிர்டாவுஸ் தெரிவித்தார்.

கட்டப்படும் ஒவ்வொரு கோபுரமும் தளத்தின் அளவு மற்றும் கட்டப்பட்ட சூழலின் அடிப்படையில் செய்யப்படும் பராமரிப்புக்கு சில உத்தரவாதமும் உள்ளதாக Edotco மலேசியா நிறுவனத்தின் புதிய கட்டுமான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் செயல்பாடுகளின் தலைவர், யீருடி முஹமட் ஹைரி கூறினார்.

இதனிடையே, ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் அதன் செயல்பாட்டைத் தொடங்க மூன்று மாதங்கள் வரை தேவைப்படும் என்று CelcomDigi Universal Service Provision திட்ட நிர்வாகி,
முஹமட் ஷாரிஃப் முஹமட் ராவுஸ் தெரிவித்தார்.

பகாங் மாநிலத்தில், 13 தொகுதிகளைக் கொண்ட ஜெண்டேலா திட்டத்தின் கீழ், 191 புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

19 தொலைத்தொடர்பு கோபுரங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய அளவிலான கட்டுமானத்தை கொண்டது 34-வது தொகுதியாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)