பொது

மலேசியாவுடன் பல வெற்றித் திட்டங்களை வகுக்க சிங்கப்பூர் இலக்கு

28/06/2024 07:50 PM

ஜோகூர் பாரு, 28 ஜூன் (பெர்னாமா) -- மலேசியா - சிங்கப்பூர் இடையிலான எல்லைப் பகுதிகளை இணைக்கும் பாலத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தவும் இன்னும் பல வெற்றித் திட்டங்களை வகுக்கவும் தாம் உறுதி கொண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் தெரிவித்தார்.

கடந்த 1924-ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இப்பாலமானது, கடந்த நூறு ஆண்டுகளாக இரு நாட்டு மக்களுக்கும் இடையே சிறந்த இணைப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த நூறு ஆண்டுகள் மட்டுமல்ல, வரவிருக்கும் இன்னும் 100 ஆண்டுகளிலும் இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுபெற வேண்டும் என்று, இன்று தமது சமூகவலைத்தளத்தில் லோரன்ஸ் வோங் பதிவிட்டிருந்தார்.

சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் இலக்கவியல் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற புதிய துறைகளிலும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, ஜோகூர் - சிங்கப்பூர் பாலமானது இரு நாடுகளுக்கிடையிலான சகோதரத்துவம், நட்பு மற்றும் வரலாற்றின் தனித்துவமிக்க உறவின் சின்னமாகும் என்று சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது முகநூல் பக்கத்தின் வாயிலாக வர்ணித்தார்.

உலகின் பரபரப்பான தரைவழிப் பாதைகளில் ஒன்றான இப்பாலம், சிங்கப்பூர் மற்றும் மலேசியர்களுக்கு பல மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.

சிங்கப்பூரும் மலேசியாவுக்குமான உறவுகள் தொடர்ந்து ஆழமாக வளரவும், எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொள்ளவும் தமது தரப்பு உறுதி கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அவற்றுடன், விரைவுப் போக்குவரத்து முறையின் நிறைவு மற்றும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வளர்ச்சியும் தமக்கு உற்சாகத்தை அளிப்பதாக விவியன் கூறினார்

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]