A, B, C கிரேட் முட்டைகளின் சில்லறை விலை 3 சென் குறைப்பு

17/06/2024 05:17 PM

கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- நாடு முழுவதும் A, B, C கிரேட் முட்டைகளின் சில்லறை விலை ஒரு முட்டை 3 சென் குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருகின்றது.

இலக்கிடப்பட்ட உதவித் தொகையின் வழி சேமிக்கப்பட்ட பணத்தை மக்களுக்கே மீண்டும் வழங்கும் முயற்சிக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு நடவடிக்கை அமைந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தற்போது, A கிரேட்டிலான ஒரு முட்டையின் சில்லறை விலை 42 சென்னுக்கும், B கிரேட் முட்டை 40 சென் மற்றும் C கிரேட் முட்டை 38 சென் விலையிலும் விற்கப்படுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கோழி முட்டை உற்பத்திக்கான செலவு குறிப்பாக கோழி தீவனத்திற்கான அடிப்படை பொருட்கள் செலவு குறைந்துள்ளதை இந்த அண்மைய நிலவரம் காட்டுவதாக அவர் தெளிவுப்படுத்தினார்.

மக்களின் உணவுத் தேவைக்காக ஒரு கோழி முட்டைக்கு 10 சென் உதவித் தொகை வழங்குவதற்கு 10 கோடி ரிங்கிட் செலவாகும்.

கடந்த 2023 ஆம் ஆண்டில் கோழி முட்டைக்கு 92 கோடியே 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேவேளையில், உலகளவில் சமையலுக்கான சுத்தமான செம்பனை கச்சா எண்ணெய் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 3,890 ரிங்கிட் உயர்ந்தாலும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட சமையலுக்கான சுத்தமான செம்பனை எண்ணெய் விலையை ஒரு கிலோவுக்கு ஆறு ரிங்கிட் 90 சென்னாக அரசாங்கம் இன்னும் நிலைநிறுத்தி வருகிறது.

மக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான பிரச்சனைகள் ஆக்கப்பூர்வமாகக் கையாளப்படும் என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]