உலகம்

மின்கலன் தொழிற்சாலை வெடிப்பு சம்பவத்தின் பலி எண்ணிக்கை 22-ஆக உயர்வு

25/06/2024 07:41 PM

ஹுவசியோங், 25 ஜூன் (பெர்னாமா) -- தென் கொரியாவின், ஹுவசியோங் நகரில் உள்ள மின்கலன் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், எண்மர் காயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை செய்துக் கொண்டிருந்ததாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சுமார் 17 பேர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

வெடிப்பினால் ஏற்பட்ட தீயை சுமார் ஆறு மணி நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியாமல் போனது. 

இந்நிலையில், சம்பவ இடத்தில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.

அதோடு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கைக் குறித்தும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்த விசாரணையில் ஒன்பது துறைகளைச் சேர்ந்த 40 அதிகாரிகள் இடம்பெற்றிருப்பதாக விசாரணைக்கு பொறுப்பேற்றிருக்கும் போலீஸ் அதிகாரியான ஓ சுக் பொங் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]