உலகம்

கள்ளக்குறிச்சி: சட்டவிரோத கள்ளச்சாராயத்தை குடித்ததால் 35 பேர் பலி

20/06/2024 06:04 PM

தமிழ்நாடு, 20 ஜூன் (பெர்னாமா) -- தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததால் சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக, அம்மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியின், கருணாபுரம் என்ற இடத்தில் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் குடித்ததாக 100-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அதில், சிகிச்சை பலனின்றி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசு மதுபானக் கடைகளில், மதுபானங்களின் விலை அதிகம் என்பதால், கருணாபுரம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள், கள்ளச்சாராயத்தை நாடி வந்துள்ளனர்.

அதனைக் குடித்தவர்களுக்குக் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

பல முறை சிறை சென்றுள்ள இவர் மீண்டும் மீண்டும் கள்ளச்சாராய விற்பனையை தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இச்சம்பவம் குறித்துப் பேசியிருக்கும் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைதான வேளையில், தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)