பொது

தமிழில் யோகக் கலையைக் கற்பிக்கிறது பி.கே.எஸ் ஐயங்கார் யோகஷலா

20/06/2024 08:29 PM

கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- பரப்பரப்பு நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடலையும் மனதையும் சீர் செய்து, அமைதியைத் தரும் யோகக் கலையைக் கற்று தேர்வதற்கு பல்லின மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

இந்த யோகக் கலையானது, மலேசியாவில், பெரும்பாலான பயிற்சி மையங்களில் ஆங்கில மொழிகளில் போதிக்கப்படும் நிலையில், நேரடியாகவும் இயங்கலை வாயிலாகவும் அதனை தமிழில் கற்பிக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது பி.கே.எஸ் ஐயங்கார் யோகஷலா. 

தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக, இந்த யோகாவை மாற்றும் நோக்கத்துடன், அவர்களுக்காக பிரேத்தியகமாக தமிழ் வகுப்பை தாங்கள் தொடங்க உள்ளதாக பி.கே.எஸ் ஐயங்கார் யோகஷலா தோற்றுநர் எஸ். நந்தகுமார் தெரிவித்தார். 

''அனைத்து வகுப்புகளும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். உலக யோகா தினத்தை முன்னிட்டு முதல் முதலாக தமிழில் வகுப்பைத் தொடங்கவுள்ளோம். தமிழ்ப் பேசக்கூடியவர்களுக்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கும்,'' என்றார் அவர். 

சுமார் 300 மாணவர்கள் பயிலும் இந்த யோகா பயிற்சி மையத்தில், தற்போது பிறமொழி பேசக்கூடியவர்களே அதிகம் உள்ளதால் தமிழ் மக்களை ஈர்க்கும் வகையிலேயே தங்களின் இந்த முயற்சியை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இந்நிலையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக யோகா தினத்தை முன்னிட்டு, நாளை தொடங்கி ஜூன் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பல்வேறு நிகழச்சிகளையும் தங்கள் தரப்பு ஏற்பாடு செய்துள்ளதாக நந்தகுமார் குறிப்பிட்டார். 

''சிறுவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என்று அனைவருக்கும் இங்கு யோகா கற்பிக்கப்படுகிறது. யோகா ஆசிரியர்கள் ஆவதற்கு விருப்பம் உள்ளவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்,'' என்றார் அவர். 

அதுமட்டுமின்றி, யோகா சார்ந்த உணவு வகைகளின் அறிமுகம், அதன் ஆசனங்களை உட்படுத்திய போட்டிகள், ஒரு மாணவர் ஒரு செடி நடுதல் என பல அங்கங்ககள் இணைத்து, ஒரு யோகத் திருவிழாவாகவே இந்த மூன்று நாள்கள் கொண்டாடப்படும் என்று அவர் விரித்தார். 

கோலாலம்பூர், தாமான் டேசாவில் அமைந்துள்ள பி.கே.எஸ் ஐயங்கார் யோகஷலா மையத்தில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் https://www.bksiyengaryogashala.com/festival/ எனும் அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்துகொள்ளுமாறு நந்தகுமார் கேட்டுக்கொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]