பொது

சுங்கை பாக்காப் தேர்தல் பிரச்சாரம்; 3R விவகாரத்தைக் கண்காணிக்க சிறப்புக் குழு

21/06/2024 07:15 PM

பினாங்கு, 21 ஜூன் (பெர்னாமா) -- நாளை தொடங்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரச்சார காலம் முழுவதும் 3R எனப்படும் மதம், இனம் மற்றும் அரசக் குடும்பம் தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கண்காணிக்கும் ஒரு சிறப்புக் குழுவை பினாங்கு போலீஸ் அமைத்துள்ளது.

போட்டியிடும் கட்சிகளின் பிரச்சாரத்தில் 3R விவகாரம் குறித்து எழுப்பும் தரப்பினர் மீது, அச்சிறப்புக் குழு, கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.

''எனவே, ஆதரவைப் பெறுவதற்காக பிரச்சாரத்தின் போது இந்த 3R விவகாரத்தை பிரச்சனையாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும் போட்டியிடும் கட்சிகளுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்,'' என்றார் அவர்.

இன்று, பினாங்கு, சுங்கை பாக்காப்பில் அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம்-இன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹம்சா அஹ்மாட் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டு, பிரச்சாரங்களை நடத்துவதற்கான அனுமதியைப் பெற அரசியல் கட்சிகள் முன் கூட்டியே போலீஸிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)