உலகம்

புது டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது

28/06/2024 08:20 PM

புது டெல்லி, 28 ஜூன் (பெர்னாமா) -- இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில், புறப்படும் பகுதிக்கான முதலாவது முனையத்தின், மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில், ஒருவர் பலியானதோடு, எண்மர் காயமுற்றிருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து இணையத்தில் பகிரப்பட்ட படங்களில், விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில், ராட்சத தூண்களின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நசுங்கிய நிலையில் காணப்பட்டது.

இந்தியாவின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, அதாவது மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

அண்மையில் தான் அந்த விமான நிலையில் பல்வேறு நிலைகளில் மேம்படுத்தப்பட்டு, உள்நாட்டு விமானங்களின் பயணத்திற்காக செயல்படத் தொடங்கியது.

இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை விமான நிலையம் மூடப்படுவதோடு, அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்யப்படுவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் உட்பட மருத்துவ உதவிகளை வழங்க அவசரகால பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அந்த விமான நிலையத்தைத் தவிர்த்து அங்குள்ள மற்ற முனையங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன.

புதுடெல்லியில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)