சிறப்புச் செய்தி

தட்டையான பாதப் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சை தீர்வாக அமையும்

01/07/2024 08:44 PM

கோலாலம்பூர், 01 ஜூலை (பெர்னாமா) -- உலக மக்கள் தொகையில் 20-இல் இருந்து 37 விழுக்காட்டினர் flat foot எனப்படும் தட்டையான பாதத்தைக் கொண்டுள்ளனர். 

கால் தொடர்பிலான சுமார் 90 விழுக்காட்டு பிரச்சனைகள் இந்தத் தட்டையான பாதத்தினாலேயே உண்டாவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்நிலையில், பெரும்பாலும் பிறப்பிலேயே உள்ள இந்தப் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் வழங்கப்படும் சிகிச்சை தீர்வாக அமையும் என்கிறார், பேராக், தைப்பிங் மருத்துவமனையில் Physiotherapist எனப்படும் உடல் இயக்க மருத்துவ அதிகாரியாகப் பணிபுரியும் கோகிலவாணி எஸ்.கிருஷ்ணன்.

எவ்வாறு இந்தத் தட்டையான பாதம் அமைந்திருக்கும் என்பதையும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கோகிலவாணி எஸ்.கிருஷ்ணன் இவ்வாறு விவரித்தார்.

''இயல்பு நிலையில் உள்ள பாதத்தின் அடியில் வளைவு இருக்கும். ஆனால், இவர்களின் பாதத்தில் அந்த வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். அந்த வளைவு உண்மையில் நமது உடல் எடையைச் சமச்சீராக வைத்திருக்கும். அந்த வளைவு இல்லாதவர்களுக்கு, இடுப்பு, கால், முதுகு வலி, வீக்கம் போன்ற உபாதைகள் உண்டாகும்,'' என்றார் அவர்.

இந்தத் தட்டையான பாதத்தினால் வீக்கம், முதுகுவலி, உடல் எடையைத் தாங்க முடியாத சரிசமமற்ற உடல்நிலை ஏற்படும் என்பதால் அதற்கான சிகிச்சை முறை அவசியமான ஒன்று என்றும் கோகிலவாணி வலியுறுத்தினார். 

''முதலில் வலியை நீக்கும் சிகிச்சையை அளிப்போம். பின்னர், ultrasound, interferential சிகிச்சை, tens சிகிச்சை, shockwave சிகிச்சை, laser சிகிச்சை போன்றவற்றை நாங்கள் வழங்குவோம். பொருத்தமான காலணியை அணியவும் நாங்கள் ஆலோசனை வழங்குவோம். அல்லது அவர்கள் அணியும் காலணியில் வளைவை உண்டாக்கும் ஒருவித கருவியை பொருத்துவோம்,'' என்றார் அவர். 

சிகிச்சை முறைகளைத் தவிர்த்து உடல் இயக்க மருத்துவமும் அதாவது உடற்பயிற்சியும் இப்பிரச்சனைக்குத் தீர்வை அளிக்கும் என்று அவர் கூறினார். 

''கோல்ஃப் பந்தை பாதத்தடியில் உருட்டுதல், துணியைக் கொண்டு கால்விரல் பகுதியை பின்புறம் இழுத்தல் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்,'' என்று அவர் விவரித்தார். 

தட்டையான பாதம் தீர்க்கப்படக்கூடிய சிக்கல் என்பதால், அது சார்ந்த மருத்துவரை நாடி உடனடியான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு கோகிலவாணி கேட்டுக்கொண்டார். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]